விமானங்கள் இறங்க அனுமதி - தமிழக அரசு விளக்கம்
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரத் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க., சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளதாகவும் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைச் செவ்வாய்க் கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.
Comments