'போலீஸிடம் சென்றால், உயிருக்கும் மானத்துக்கும் உத்திரவாதம் இல்லை! '- தம்பியைப் பறிகொடுத்த சாத்தான்குளம் பெண் பகிரங்க குற்றச்சாட்டு!

0 23383
ஃபெமினா மற்றும் போலீஸ் தாக்கியதில் இறந்த அருண்பாரத்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரு வியாபாரிகள் போலீஸ் கஸ்டடியில் இறந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பல குழப்பங்கள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், மதுரை உச்சநீதிமன்ற கிளை, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. மேலும், போலீஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ஆவணங்களையும் சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பையடுத்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் புற்றீசல் போல வெளி வந்து கொண்டிருக்கின்றன.imageசாத்தான்குளத்தில் கடந்த 2006- ம் ஆண்டு அருண்பாரத் என்ற 20 வயது இளைஞர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். கேரளாவில் தனியார் நிறுவனத்தில் அருண் பாரத் பணிபுரிந்துள்ளார். அவரிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் இருந்துள்ளது. ஊருக்கு வந்து விட்டு கேரளாவுக்கு திரும்பும் போது, அந்த பைக்கை தன் நண்பர் ஜான்சன் என்பவரிடத்தில் கொடுத்து செல்வது அருண்பாரத்தின் வழக்கமாக இருந்துள்ளது. ஜான்சனிடத்திலிருந்த பைக் காணாமல் போனதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஜான்சன் அந்த பைக்கை விற்று விட்டது அருண் பாரத்துக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக ஜான்சன் கைது செய்யப்ட்டார். அருண்பாரத்தையம் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது, போலீஸ் தாக்கியதில் 20 வயது இளைஞர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார். ஆனால், இந்த மரணத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்பதுதான் விசித்திரமாக உள்ளது.
image

இந்த சம்பவம் குறித்து அருண்பாரத்தின் சகோதரி ஃபெமினா கூறுகையில், ''2006- ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் தலைமையில் போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டிலிருந்த என் சகோதரன் அருண் பாரத்தை வெளியே இழுத்து வந்து தெருவில் வைத்து அடித்தனர். பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸார் சேர்ந்து என் தம்பியை அடித்தனர். அவன் வலிதாங்க முடியாமல் துடித்தான். எங்க முன்னாடியே வைத்து மர்மஸ்தானத்தில் மிதித்தனர். என் தம்பி கத்தினான். தெருவில் கூட்டம் சேர்ந்ததையடுத்து, என் தம்பியை போலீஸ் வேனில் அரிசி மூட்டையை தூக்கிப் போடுற மாதிரி, தூக்கிப் போட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர் . இதை தடுக்க எனது மற்றோரு சகோதரன் விஜய் முயன்றான் . அவனையும் தாக்கி போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறிது தொலைவு சென்றதும் விஜயை இறக்கி விட்ட போலீஸார், அருண் பாரத்தை மட்டும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். ஆனால், அருண் பாரத் அதுக்குப் பிறகு கண் முழிக்கவே இல்லை. என் மற்றோரு தம்பி விஜய்தான் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றான், அங்கு அருண்பாரத் உயிரிழந்து போனான்.

போலீஸார் தாக்கியதில் பலத்த காயமடைந்த என் தம்பி மருத்துவமனையில் உயிரிழந்து போனான். அருண் பாரத் இறந்து போனதால், மிகவும் துக்கமடைந்த என் மற்றோரு சகோதரன் விஜய் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்த என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இப்படி, போலீஸாரால் என் வீட்டில் மூன்று இறப்புகள் நடந்துள்ளன. முதலில் அந்த சப் - இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். மனித உரிமை ஆணையத்தில் நாங்கள் முறையிட்டோம். ஆனால், பெரியளவில் பலனில்லை. என் தம்பிகள் இறப்புக்கு காரணமாக சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் இப்போதும் பணியில்தான் இருக்கிறார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை நடந்து விசாரணை முடிந்து விட்டது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ப்பு வரவில்லை'' என்று வேதனையுடன் கூறினார்.
image

மேலும், ஃபெமினா கூறுகையில், ''தற்போது ஜெயராஜ் , பென்னிக்ஸ் இறப்பில் சஸ்பென்டான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் இப்போதும் என் மற்றோரு தம்பி வினோத்தை எந்த காரணமும் இல்லாமல் கைது செய்வார். இந்த மே மாதம் கூட வினோத்தை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். மீட்க நான் போலீஸ் நிலையம் போனால், 'என்ன நீ இவ்வளவு அழகா இருக்கா... உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே.. எங்க கூட வந்துடு நாங்க ராணி மாதிரி பார்த்துக்குறோம்' னுலாம் சொல்லி என்னை டார்ச்சர் செய்துள்ளார். சமீபத்தில் கூட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 'எங்களுக்கு சமையல் செய்து தர அவங்க வருவாங்களா' னு கேட்டு சொல்லுங்கனு இன்னோருத்தர் வழியா என்னிடம் பேசி பார்த்தார். சாத்தான்குளத்துல எது நடந்தாலும் போலீஸ் நிலையம் மட்டும் போயிடக் கூடாது. போனா உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. மானத்துக்கும் உத்திரவாதம் இல்லை. சாத்தான்குளத்துல மீசை கொஞ்சம் பெரிசா வளர்த்தா கூட போலீஸ்காரங்களுக்கு பிடிக்காது. இத்தனை அக்கிரம செயல்களை அவங்க இந்த மண்ணுல பண்ணிட்டு இருந்தாங்க'' என்று பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் ஒட்டு மொத்த காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்டிருப்பதால், இனிமேலாவது அந்த ஊருக்கு போலிஸால் நல்லது நடக்கும் என்று நம்புவோம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments