மக்களுக்குத் தடுப்பு மருந்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமெரிக்கா மருத்துவ வல்லுநர்
அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற மறுத்தால், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியாது என அமெரிக்க மருத்துவ வல்லுநர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மூலமோ, ஏற்கெனவே நோய்ப் பாதிப்புக்குள்ளாகியோ குறிப்பிட்ட நோய்க்கான எதிர்ப்பு சக்தியை ஒரு சமூகமே பெற்றிருப்பது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மருத்துவ அதிகாரியான அந்தோணி பாசி, தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் 70 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரை பயனளிக்கும் ஒரு தடுப்பூசியை மக்களில் மூன்றில் இரு பங்கினர் பெற்றிருந்தால், அதனால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தடுப்பு மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு வீரர்கள், சமுதாயத்தில் புகழ்பெற்றவர்கள் ஆகியோரால் இத்தகைய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சிஎன்என் நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் மூன்றில் ஒருபங்கினர் தடுப்பு மருந்தைப் பெறப்போவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
Comments