'நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்!'- பேயர்ன்மியூனிச் அணியுடன் பட்டம் வென்ற முதல் இந்தியர் மகிழ்ச்சி

0 5814
பேயர்ன் சூப்பர்ஸ்டார் லெவோண்டஸ்கி அருகே சர்ப்ரீத்சிங் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

ரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாட வேண்டுமென்பது இந்திய கால்பந்து வீரர்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். நான்கு அல்லது ஐந்து இந்திய வீரர்கள் அல்லது இந்திய வம்சாவளி வீரர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதைய இந்திய கேப்டன் சுனில் சேத்ரி , முன்னாள் கேப்டன் பாய்ச்சிங் பூட்டியா போன்றவர்கள் ஐரோப்பிய கிளப்புகளுக்கு ஆடியுள்ளனர்.

இந்திய வம்சாவளி வீரர்களில் விகாஷ் துஸாரோ பிரான்ஸ் நாட்டின் லியோன் அணிக்காக ஆடியுள்ளார். மற்றபடி, இந்திய கால்பந்து வீரர்கள் பெரியளவில் ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக சோபித்தது இல்லை. தற்போது, முதன்முறையாக இந்திய வீரர் ஒருவர் ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து அணியான பேயர்ன் மியூனிச் அணிக்காக விளையாடி புதிய சாதனையைப் படைத்துள்ளார். நடப்பு சீசனில் ஜெர்மனி ஜாம்பவான் அணியுடன் பந்தஸ்லீகா பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
image

பேயர்ன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சர்ப்ரீத் சிங்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். நியூசிலாந்தில் இந்திய பெற்றோர்களுக்கு பிறந்த சர்ப்ரீத்சிங் 21 வயதே நிரம்பிய அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். போலந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். இவரின், ஆட்டம் பேயர்னின் கவனத்தை ஈர்க்க 2019- ம் ஆண்டு ஜூலை 31- ந் தேதி இவரை, பேயர்ன்மியூனிச் அணி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனாலும், 5 மாதம் கழித்தே பேயர்ன் அணிக்காக முதன்முறையாக சர்ப்ரீத் சிங் களமிறங்கினார். டிசம்பர் 14-ந் தேதி வெர்டர் பிரமன் அணிக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரராக ஜெர்மனி பந்தஸ்லீகாவில் களமிறங்கினார் சர்ப்ரீத் சிங்.

ஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில் களம் இறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது, பேயர்ன் அணிக்காக முன்னணி வீரர்களுல் ஒருவராக சர்ப்ரீத்சிங் மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரேபர்க் அணியுடன் பேயர்ன்மியூனிச் அணி மோதியது. அப்போது, முதல் 11 வீரர்களில் ஒருவராக சர்ப்ரீத்சிங் களமிறக்கப்பட்டார். பேயர்ன் அணிக்காக 64 நிமிடங்கள் களத்தில் இருந்தார்.

இந்த சீசனில் தொடர்ந்து 8- வது முறையாக பேயர்ன் அணி ஜெர்மன் பந்தஸ்லீகா பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சர்ப்ரீத் சிங், 'பேயர்ன் அணிக்காக விளையாடும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments