வட ஐரோப்பாவில் அதிகரிக்கும் அணுக் கதிர்வீச்சு... ரஷ்யா அணு உலையில் கசிவா?

0 5176

மேற்கு ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளால் வடக்கு ஐரோப்பாவின் வளிமண்டலத்தில் அணுக் கதிரியக்கத் தன்மையின் அளவு திடீரென்று அதிகரித்திருப்பதாக வட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நார்டிக் கூட்டமைப்பைச் சேர்ந்த அணு பாதுகாப்பு அமைப்புகள், வடக்கு ஐரோப்பிய வளிமண்டலத்தில் வழக்கத்தைவிடவும் அதிகமான கதிரியக்கம் பரவியிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இது குறித்து ஆய்வு நடத்திய டச்சு சுகாதார அமைப்பு, "மேற்கு ரஷ்யாவில் உள்ள அணு உலைகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளே இதற்குக் காரணம். அங்கிருந்து பரவும் கதிர் வீச்சு தற்போது வட ஐரோப்பா வளிமண்டலம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவின் அணுமின் நிலையங்களை இயக்கும் ரோசனெர்கோடோம் (Rosenergoatom) அமைப்பானது ரஷ்யாவின் நியூஸ் ஏஜென்சியான டாஸ்ஸிடம், "ரஷ்யாவின் வடமேற்கில் அமைந்துள்ள இரண்டு அணுமின் உற்பத்தி நிலையங்களிலும் இதுவரை எந்த பிரச்னைகளும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கம் போலவே இயங்கி வருகிறது. கதிர்வீச்சுத் தன்மையையும் கவனித்து வருகிறோம். வழக்கத்துக்கு மாறாக எந்தவித அளவீடுகளும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

"தற்போது காற்றில் மிகச்சிறிய அளவில் அணுக்கதிர் வீச்சின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்த அதிகரிப்பு மனிதர்களுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது. ஆனால், இந்தக் கதிர்வீச்சின் அளவு தொடர்ந்து அதிகரித்தால் அனைவருக்குமே பிரச்னைதான். கிடைத்திருக்கும் தகவல்கள் மேற்கு ரஷ்யாவிலிருந்தே பரவுவதாகக் காட்டுகிறது. ரஷ்யா அணுமின் நிலையங்களில் உள்ள நியூக்லைட்ஸ் ஏற்பட்டிருக்கும் சேதத்தினால் தான் வளிமண்டலத்தில் கதிரியக்கத்தன்மையின் அளவு அதிகரித்திருக்கிறது. ரஷ்யா அலட்சியப்படுத்தாமல் உடனடியாக இந்த சேதத்தைச் சரிப்படுத்த வேண்டும்" என்கிறார்கள் நெதர்லாந்து அதிகாரிகள்.

அணு உலை குறைபாடு, பணியாளர்கள் கவனக்குறைவு ஆகிய காரணங்களால் இதற்கு முன்பு, 1986 - .ல் சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட செர்னோபில் அணு உலையில் மிகப்பெரிய அளவில் அணு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments