சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டால், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான, ஜெயராஜ்-பென்னிக்ஸ், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்திருப்பதாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி, அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் முறையிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். சி.பி.ஐ.க்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள், அது அரசின் கொள்கை முடிவு எனும்போது, நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதோடு, விசாரணையையும் கண்காணித்து வருகிறது என கூறிய நீதிபதிகள், விசாரணைக்கு காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரியவருவதாக சுட்டிக்காட்டினர்.
மாவட்ட நிர்வாகம், ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து, தடயவியல் வல்லுநர் குழுவை நியமித்து, சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று, வழக்கு தொடர்பான அனைத்து தடயங்களையும் ஆவணங்களையும் திரட்டி பத்திரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் பட்சத்தில், வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, வழக்குக் குறிப்பு ஆகியவற்றை சிபிஐ விசாரணை அதிகாரியிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments