பத்து ஆண்டுகள் காத்திருப்பு; யமுனையில் தென்பட்ட அரிய வகை கரியல் முதலைகுட்டிகள்!
லாக்டௌன் காரணமாக உலக சுற்றுச்சூழலில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம் குறைந்து, வாகன ஓட்டமும் முற்றிலும் குறைந்து போனதால், காற்றுமாசு குறைந்துள்ளது. டெல்லி போன்ற அதிக காற்றுமாசுள்ள நகரத்தில் கூட இப்போது சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்கின்றனர். அதேபோல, நதிகளிலும் நீர் சுத்தமாகியுள்ளது. இந்தியாவில் அதிக மாசடைந்த நதியாக கருதப்படுவது யமுனை நதி. இந்த நதி இந்தியாவின் மிகப் பெரிய நீர் வழிப்பாதையும் கூட. அரிய வகை டால்பின்கள், மீன்களை மட்டுமே உண்டு வாழும் gharial எனப்படும் அரியவகை முதலைகள், யமுனை நதியில் வசித்து வந்தன. அதிகமான நீர் மாசு காரணமாக டால்பின்கள் பல இறந்து போயின. gharial வகை முதலைகள் 10 ஆண்டுகளாக தென்படவே இல்லை.
இந்த நிலையில், லாக்டௌன் காரணமாக யமுனை நதி சுத்தமடைந்துள்ளது. தண்ணீரும் பளிங்கு போல ஓடத் தொடங்கியுள்ளது . இதனால், கரியல் எனப்படும் அரியவகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. நான்கு ஐந்து முதலைக்குட்டிகள் தண்ணீரின் மேற்பரப்பில் தென்பட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த முதலைகள் மீன்களை மட்டுமே உண்டு வாழ்பவை. யமுனை நதியின் துணை நதியான சம்பலில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. இது குறித்து சம்பல் வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், ''யமுனை நதியுடன் சம்பல் நதி கலக்குமிடத்தில் 30 கி.மீ தொலைவில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. தற்போது, இவை நல்ல வளர்ச்சி கண்டு நீரில் விளையாடுகின்றன. இது ஒரு திருப்தி தரும் மாற்றம்'' என்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமே காணப்படும் முதலைகளில் கரியல்களும் ஒரு வகை ஆகும். இவற்றின் வாய் பகுதி நீண்டு மெலியதாக காணப்படும். சுமார் 7 மீட்டர் வரை வளரக் கூடியவை. வட இந்தியாவில்பல நதிகளில் இவை அதிகமாக இருந்தன. இதன், தோலில் உள்ள மருத்துவ குணத்துக்காக இந்த முதலைகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டன. தற்போது, உலகில் வேகமான அழிந்து வரும் இனமாக இந்த வகை முதலைகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி, சம்பல் நதிகளில் அதிகளவில் வாழ்ந்தன. இதில், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , உத்தரபிரதேசத்தில் ஓடும் சம்பல் நதியில் சம்பல் வனச்சரணாலயம் உருவாக்கப்பட்டு, இந்த வகை முதலைகளை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மெட்ராஸ் முதலைப்பண்ணையில் இந்தியாவின் மூன்று வகை முதலைகளான நன்னீர் முதலை, உப்புநீர் முதலை, கரியல் வகை முதலைகள் பாதுகாக்கப்படுகின்றன.
Comments