சேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிமென்ட் குழாய்களுக்குப் பதில் இரும்புக் குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
சேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தற்போதுள்ள சிமெண்ட் குழாய்களை மாற்றிவிட்டு இரும்புக் குழாய்கள் பதிக்க 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள நீர் உந்தும் நிலையத்தில் நடந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 11 புள்ளி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிமென்ட் குழாய்களை அகற்றிவிட்டு இரும்புக் குழாய் பதிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள் பயனடையும். இதுவரை ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், திட்ட முடிவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட உள்ளது.
தற்போது ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு 49 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இனிக் கூடுதலாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகளுக்குத் தற்போது 46 லட்சம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இனிக் கூடுதலாக 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments