தூக்கி வீசப்படும் மாஸ்க்கும் நமக்கு ரிஸ்க்கு தான்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

0 16696

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே போலீசுக்கு பயந்து சாலையில் கிடந்த முககவசத்தை பயன்படுத்திய இளைஞர் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் போலீசுக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை பயன்படுத்திய இளைஞரால் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி யானதாக தகவல் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியானது.

அதில் இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்றபோது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததாகவும், முககவசம் அணியாமல் போலீஸ் கையில் சிக்கினால் அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த அந்த இளைஞர் அங்கு கீழே கிடந்த முகக்கவசம் ஒன்றை எடுத்து அவசரத்திற்கு முகத்தில் மாட்டிக் கொண்டதால், இளைஞர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

இந்த தகவல் குறித்து விசாரித்த போது, வாட்ஸ் அப் தகவல் வதந்தி என்று அறிவித்துள்ள போலீசார், விருதம்பட்டு சிவராஜ் நகரை சேர்ந்த சி.எம்.சி காவலாளி ஒருவர் மாஸ்க்கை கழற்றி விட்டு தன் வீட்டிற்கு சென்ற போது அவரால் வீட்டிலிருந்த அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியது. இது 22 ந்தேதி உறுதிப் படுத்தப்பட்டதாகவும் இந்த தகவலை திரித்து போலீசுக்கு பயந்து 100 ரூபாய் அபராதத்தை தொடர்பு படுத்தி நடக்காத ஒன்றை, நடந்த சம்பவம் போல வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தகவல் வதந்தியாக இருந்தாலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முககவசத்தை பயன்படுத்துவோர் பொறுப்பற்ற முறையில் அதனை சாலையில் வீசிச்செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒருவர் அணிந்த முககவசத்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் சுகாதாரதுறையினர் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்புவோர் கொரோனா காலம் முடியும் வரை வீட்டில் தனித்திருப்பது, வீட்டில் உள்ளோருக்கு நலம் பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments