நிமோனியா, கார்டியாக் அரெஸ்ட்; சளைக்காத சைனுதீன்! பிளாஸ்மாவால் தோற்று ஓடியது கொரோனா
கொரோனா நோயாளிகளுக்கு தற்போது பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சந்தேயந்தர் ஜெயினும் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால், உடல் நிலை நல்ல முன்னேற்றமடைந்து முற்றிலும் குணமாகி சத்யேந்தர் ஜெயின் வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பாதித்ததால் நிமோனியா காய்ச்சலுடன் கார்டியாக் அரெஸ்டாலும் பாதிக்கப்பட்ட ஒருவரை பிளாஸ்மா சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பாலக்காட்டு மாவட்டம் திரிதலா பகுதியை சேர்ந்தவர் சைனுதீன் பாகவி. இவர், மஸ்கட்டில் இருந்து திரும்பிய நிலையில் , கடந்த ஜூன் 7- ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தீவிர நிமோனியா காய்ச்சலும் இருந்தது. மஞ்சேரி அரசு மருத்துவமனையில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கார்டியாக் அரெஸ்டும் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். ஏற்கெனவே , கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகிய வினித் என்ற இளைஞர் தன் பிளாஸ்மாவை தானமாக தர முன் வந்தார். சென்னையிலிருந்து கேராளவுக்கு சென்ற வினித் கடந்த மே மாதம் 27- ந் தேதி கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர். வினித் வழங்கிய பிளாஸ்மாவை கொண்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்ததில் சைனுதீன் பாகவி முற்றிலும் குணமடைந்தார்.
இதையடுத்து , சைனுதீனை மருத்துவர்கள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, வினித்தும் கலந்து கொண்டார். பிளாஸ்மா கொடுத்து தன் உயிரை காப்பாற்றியதற்காக சைனுதீன் , வினித்துக்கு நினைவுப்பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த வைரஸை போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும். கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம், அவர்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி முழுவீச்சில் செயல்பட்டு கொரோனா வைரஸை வீழ்த்தும் என்பதுதான் பிளாஸ்மா சிகிச்சை முறை ஆகும்.
நிமோனியா, கார்டியாக் அரெஸ்ட்; சளைக்காத சைனுதீன்! பிளாஸ்மாவால் தோற்று ஓடியது கொரோனா#CoronaUpdatesInIndia #Plasma_Therapy https://t.co/6hDMX4r4bG
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments