தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு
தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஊராட்சிகளை அதிவேக இண்டர்நெட் மூலம் இணைத்து, அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்கும் திட்டமே பாரத்நெட் திட்டம்.
இதன்படி தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு, ஆப்டிக்கல் ஃபைபர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் அரசின் பல்வேறு சேவைகளை மக்கள் கிராமங்களில் இருந்தே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக, டான்ஃபிநெட் எனப்படும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மூலம், கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் விதிகள் மீறப்பட்டதாக ஒரு சில நிறுவனங்களும், அறப்போர் இயக்கம் என்ற அமைப்பும் புகார் தெரிவித்தன.
இதுகுறித்து, தமிழக அரசு அவ்வப்போது விளக்கங்களை அளித்து வந்தது. இந்நிலையில், பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், குறைகளை களைந்து மறுடெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments