சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!
பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கு திரும்பத் தொடங்கியிருப்பது, பொருளாதாரச் செயல்பாடுகள் வேகம் எடுப்பதற்கான அறிகுறி என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மே 1 முதல் இயக்கப்படத் தொடங்கிய, சுமார் 4ஆயிரத்து 594 ஷராமிக் சிறப்பு ரயில்கள் மூலம், 62.8 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணித்துள்ளனர். இதில் 75 சதவீத ரயில்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு இயக்கப்பட்டன. இதற்கடுத்தபடியாக மேற்குவங்கத்திற்கு அதிக ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள, பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திரும்பும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. இந்த ரயில்கள், ஜூன் 26 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், 100 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அதாவது மும்பை, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான சிறப்பு ரயில்களில் அடுத்த 4 நாட்களுக்கு 100 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.
முழுஊரடங்கு காலகட்டத்தில் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மூலம், சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் பணிசெய்த இடங்களுக்கு திரும்பத் தொடங்கியிருப்பதையே இந்த விவரம் காட்டுவதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியுள்ளார்.
பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து திரும்பும் ரயில்களில் முன்பதிவு விகிதம் நாளுக்கு நாள் அதிகரிப்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்றும், பொருளாதார செயல்பாடுகள் வேகம் எடுப்பதையே இது காட்டுவதாகவும் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதிவு அதிகரிப்பதற்கு ஏற்ப, மாநில அரசுகளுடன் பேசி, வரும் வாரத்தில் மேலும் புதிய சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
Comments