கைகளால் தோண்டி 9 கிலோ ரத்தினக்கல் கண்டுபிடிப்பு; தொழிலாளிக்கு ரூ. 25 கோடி பரிசளித்த தான்சேனியா!

0 19817

தான்சானியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மிகப்பெரிய ரத்தினக்கல்லுக்கு விலையாக, அந்த நாட்டு அரசு தொழிலாளிக்கு ரூ. 25 கோடியைக் கொடுத்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடானா தான்சேனியாவில் இயற்கை வளங்கள், தாதுக்கள், ரத்தினக்கற்கள், வைரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தான்சேனியாவில் கடந்த 2018- ம் ஆண்டு முதல் மக்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் ரத்தினங்கள், வைரங்களை அரசிடத்தில் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. ரத்தினக்கற்கள், வைரங்களை கடத்துவதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தான்சேனியாவின் வடக்கு பகுதியில் மிரோரோனி என்ற இடத்தில் சானினு லெய்ஸர் என்ற தொழிலாளி இரண்டு மிகப் பெரிய ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்தார். இவை, நீல நிற ரத்தினக்கற்கள் ஆகும். இதில், ஒரு கல்லின் எடை 9.27 கிலோவும் மற்றோரு கல்லின் எடை 5.103 கிலோவும் இருந்தது. இரண்டு ரத்தினக்கற்களையும் தான்சேனியா அரசு வாங்கிக் கொண்டு ரூ. 25 கோடிக்கான காசோலையை லெய்ஸர்க்கு வழங்கியது.

இந்த நிகழ்ச்சி தான்சேனியா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் போது, தான்சேனிய அதிபர் ஜான் மக்ஃபுலி நேரடியாக போன் செய்து அந்தத் தொழிலாளியை வாழ்த்தினார். அப்போது, 'தான்சேனியா நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று' என ஜான் மக்ஃபுலி பெருமிதம் தெரிவித்தார்.

தான்சேனியாவில் மிகப் பெரிய நிறுவனங்கள்தான் வைரங்களை, ரத்தினக்கற்களை வெட்டி எடுக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை. அந்த நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ரத்தினக்கற்களைக் கண்டுபிடிக்கலாம். இப்போது, மிகப் பெரிய ரத்தினக்கற்களை கண்டுபிடித்த சானினு லெய்ஸர் கடப்பாரை போன்ற எளிமையான கருவிகள் மற்றும் கைகளால் தோண்டியே இந்த ரத்தினக்கற்களை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று கண்டுபிடிக்கப்படும் கற்களை விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு விற்பனை மையங்களையும் உருவாக்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments