தாய் கொடூர கொலை... பாலுக்கு தவிக்கும் பிஞ்சு..! சந்தேகத்தால் அழிந்த குடும்பம்
சிவகாசி அருகே கணவனால், பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் 8 மாத பெண் குழந்தை ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெண்ணை கொன்றவனின் குழந்தை வேண்டாம் என்று பெண் வீட்டில் சிலர் ஒதுக்க எதிர்கால கேள்விக்குறியுடன் தவிக்கும் பிஞ்சுக்குழந்தையின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி
ஒன்றரை வருடத்திற்கு முன்பு பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்துவந்த சரவணகுமார், அதே வாகனத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்த ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த தம்பதிக்கு கயல் என்ற 8 மாத பெண்குழந்தை உள்ள நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சரவணக்குமார் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தனது மனைவியை தொழிற்சாலைக்கு வேலைக்கு போக வேண்டாம் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயலெட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்த சரவணக்குமார் அவரை கழுத்து அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி கிழக்கு காவல்துறையினர் ஜெயலெட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு ஜெயலட்சுமியின் தாய் கதறினார்.
இதற்கிடையே செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கி இருந்த கொலைகாரக் கணவன் சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெற்ற தாய் கொலை செய்யப்பட்டுவிட தந்தையும் ஜெயிலுக்கு சென்றுவிட, நடந்தது என்ன என்பதை அறியும் பருவமில்லா அவர்களின் 8 மாத பெண் குழந்தை கயல் வெள்ளந்தியாக விழித்துக் கொண்டிருந்தது.
வேதனையில் அழுது துடித்த ஜெயலட்சுமியின் தாயாரோ, தனது மகளே போய்விட்டாள் , இனி அவனுக்கு பிறந்த குழந்தையை தெருவில் வீசிவிடுங்கள் என்று அந்த குழந்தையை ஒதுக்க தொடங்கியது தான் வேதனையின் உச்சமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பசியால் தவித்த அந்த குழந்தை ஊராரின் கைகளில் இருந்து மாறி தனது தாயின் சகோதரியிடம் வந்து சேர, அவர் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து கதறியது அந்த பிஞ்சு..!
பாட்டிலில் பாலை ஊற்றி ஊட்டினாலும் அதனை குடிக்க மறுத்து தாயை தேடி கதறி அழுதது நெஞ்சை கனக்க வைத்தது.
இந்த நிலையிலும் ஆத்திரம் தாளாமல் அழுது கொண்டிருந்த ஜெயலட்சுமியின் தாய், குழந்தையை வாங்க மறுத்ததால், சரவணகுமாரின் குடும்பத்தினரிடம் குழந்தையை கொடுத்துவிடலாம் என ஊரார் முடிவு செய்தனர்.
தந்தையின் அவசர புத்தியால் தாயை இழந்து தவிக்கும் இந்த பெண் குழந்தையின் எதிர்காலம் கருதியாவது, மனம் உடைந்து காணப்படும் ஜெயலட்சுமியின் தாய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் முறையான கவுன்சிலிங் வழங்கி அவர்களின் பொறுப்பில் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதே மனிதாபிமானம் கொண்டோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சந்தேகத்தீ மனதில் பற்றினால் அது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிடும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த சோக சம்பவம்.
Comments