வீடு இருக்கு.. ஆள் இல்லை..! கவலையில் House Owners..! சென்னையில் வாடகை குறைந்தது

0 148580

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் சென்னையில் இருந்து வாடகை வீடுகளை விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், வீட்டு வாடகையை நம்பியிருந்த கட்டட உரிமையாளர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் இருந்தும் வாடகைக்கு ஆள் கிடைக்காமல் காத்திருக்கும் ஹவுஸ் ஓனர்களின் கவலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

சென்னையில் நல்ல தண்ணீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, கடை மற்றும் மருத்துவ வசதியுடன் முக்கியமான பகுதிகளில் நல்ல வீடு ஒன்று வாடகைக்கு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்துவந்தது. தற்போது கொரோனாவால் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

கொரோனா அச்சம் காரணமாக லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பில்லாமல் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திடீரென லட்சக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்ததால் சென்னையில் பல வீடுகள் காலியாகி உள்ளது. இதனால், பல வீடு கடைகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் காலி வீடுகளுடன் தவித்து வரும் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை குறைக்க தொடங்கியுள்ளனர்.. ஜனவரி மாதம் வரை 18000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்டு வந்த தனது வீடு ஒன்றை தற்போது 14 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருக்கும் நிலையில் கூட வாடகைக்கு யாரும் வரவில்லை என வீட்டின் உரிமையாளர் ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்...

ஓஎம்ஆர் சாலைகளில் இருந்த ஆயிரக்கணக்கான மென்பொருள் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிசெய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் அந்த பகுதியில் தங்கியிருந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டதால் அங்கும் ஏராளமான வாடகை வீடுகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன....!

வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி தாங்கள் கட்டிய வீட்டிற்கு, வரும் வாடகையை வாங்கித்தான் மாத தவணை கட்டி வந்ததாக தெரிவிக்கும் ஹவுஸ் ஓனர்ஸ், இந்த வாடகை பணத்தை நம்பித்தான் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டு செலவு வாழ்வாதாரமே இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இவற்றை மீறி புதிதாக வாடகைக்கு வருபவர்களிடம் திடீரென காலி செய்ய மாட்டோம் எனவும், திடீரென வீடுகளை காலி செய்தால் 3 மாதம் வாடகை பணத்தை கட்டிவிட்டு செல்வோம் என்ற உத்தரவாதத்தையும் சில வீட்டின் உரிமையாளர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

ஊரடங்கால் வேலையிழப்பு.., வேலை இழந்ததால் சிலரால் வாடகை செலுத்த இயலவில்லை, வாடகை செலுத்த இயலாததால் பலர் வீடுகளை காலிசெய்கின்றனர், வீடுகள் காலியானதால் சிலர் வாடகை வருமானம் இன்றி தவிக்கின்றனர்..! ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை..! என்பதை இந்த கடினமான காலம் மக்களுக்கு உணர்த்துகின்றது. 

மின்வாரியம் யூனிட்டுக்கு 1 ரூபாய் வசூலித்த காலத்தில் கூட வாடகைதாரர்களிடம் யூனிட்டுக்கு 5 ரூபாய் என கணக்கிட்டு கறாராக வசூலித்து, தங்கள் வீட்டு மின்சார பில்லையும் சேர்த்து கல்லாகட்டி லாபம் பார்த்த வீட்டு உரிமையாளர்களையும், வேலைக்கே செல்லாமல், 10 வீடுகளை கட்டிவிட்டு அதில் வரும் வாடகை மூலம் ஓகோவென்று வாழ்ந்துவந்த ஹவுஸ் ஓனர்களையும் கொரோனா கவலை கொள்ள செய்திருக்கிறது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments