கொரோனா பாதித்தோரை பிரித்து அனுப்ப தனி மையம்

0 6404

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள், அறிகுறிகள் கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கும், தனிமை மையங்களுக்கும் எப்படி பிரித்து அனுப்பப்படுகின்றனர் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

சென்னையில் கொரோனா தொற்றால் ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகள் இராண்டாயிரத்தை நெருங்கிறது. மண்டல வாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் நாள் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலைகளில் விரைந்துக் கொண்டிருக்கின்றன.

பாதிப்பின் எண்ணிக்கை அதிகமிருப்பதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சில சமயங்களில் ஆம்புலன்ஸிற்காக மறுநாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவமனைக்கு சென்ற பிறகு, தொற்றின் வீரியம், அவர்களுக்கு உள்ள இணை நோய்களை அறிந்தக்கொள்ள சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை இவற்றையெல்லாம் எடுத்தப் பிறகே அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? கொரோனா தனிமை மையத்திற்கு அனுப்புவதா? என முடிவு செய்யப்படுகிறது. இதனால் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதோடு, களப் பணியாளர்களுக்கும் வேலை பளு அதிகரிக்கிறது.

இவற்றை களையும் வகையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே, அவர்களுக்கு உள்ள நோய் பாதிப்பை கண்டறியும் பணிகள் பகுதிவாரியாக செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் டிராவல்ஸ் வாகனம் மூலம் ஒரே இடத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கு இரு மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு, மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், நோய் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருக்கும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்கின்றனர்.

பின்னர், அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை பரிசோதித்து உடற்பாதிப்புடன் கொரோனா நோய் தாக்கம் உள்ளவர்கள், அறிகுறிகள் மட்டும் இருப்பவர்கள், குறைவான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் என நான்கு வகைகளாக பிரிக்கின்றனர். அதில் முதல் இருவகைகளில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

குறைவான அறிகுறி இருப்பவர்கள் தனிமை மையங்களுக்கும், அறிகுறி இல்லாதவர்கள் வீட்டு தனிமைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். வீட்டு தனிமைக்கு அனுப்பப்படுவர்கள் அவர்கள் வீட்டில் அதற்கான வசதி உள்ளதா என சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று உறுதிபடுத்திய பிறகே அனுப்பப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியத்திற்கு ஏற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களை பிரித்து அனுப்பும் பரிசோதனை மையம் முதற்கட்டமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள நெசப்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளால் மருத்துவமனைகளில், நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படுவதால் அனைத்து மண்டலங்களிலும் இது போன்ற மையங்களை ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments