பொதுமுடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது - ஆன்லைன் வகுப்புகள் அவசியம் : மத்திய அரசு

0 9474

மத்திய அரசை பொருத்தவரை பொதுமுடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது என்றும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் வளர்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்கும் முறையாக மாறி உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான ஆன்லைன் கல்வி வழங்க விதிகளை உருவாக்க கோரி சரண்யா என்ற தாயார் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்பத்தின் சைபர் சட்டப் பிரிவு சார்பில் அதன் விஞ்ஞானி தவால் குப்தா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,  தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்பதால், மாணவர்கள் தடையில்லாமல் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் கோரிக்கைகளை  மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கனவே உருவாக்கிவிட்டது என்று  குறிப்பிட்டுள்ள அவர், ஆன்லைன் வகுப்புகளின்போது தேவையற்ற வீடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடர்பாக "இந்தியன் கணினி அவசர சேவை குழு" அவ்வப்போது எச்சரிக்கை தகவல் வழங்கி கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை  மிகவும் பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்கிறது என்று மனுவில் தெரிவித்துளார். 

மேலும் இவற்றை மீறி தேவையற்ற விடியோக்கள் ஆன்லைன் வகுப்பின்போது வந்தால், அது தொடர்பாக மனுதாரர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப முறையிலான ஒரு மாற்று வழியாக மாறி வருகிறது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments