ஆக்கப்பூர்வ ஆலோசனை தாருங்கள்.! முதலமைச்சர் வலியுறுத்தல்...

0 4841

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, இதுவரை ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கவில்லை என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நோயை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றுவதாக பாராட்டுத் தெரிவித்த அவர், அதனாலேயே கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றார்.

சேலம் மாவட்டம் மட்டும்தான் முதலமைச்சர் கண்ணுக்குத் தெரிகிறதா என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், இப்போது கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் அதையும் குறை கூறுவதாக முதலமைச்சர் கூறினார்.

அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைப்பதாகவும், அவரது பேச்சைக் கேட்டு நிவாரணப் பணியில் ஈடுபட்டு எம்எல்ஏ ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுவதாகவும், இந்த 90 நாட்களுந் அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு பணியாற்றியதால்தான், தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் உள்ளது என்றும், சமூகப் பரவலாக மாறிவிடவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். வியாபாரிகளிடத்தும் பொதுமக்களிடத்தும் காவல்துறையினர் கனிவாக நடந்து கொண்டு, அவர்களது அன்பைப் பெற வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக முழுமையான தகவல் இதுவரை வரவில்லை என்று முதலமைச்சர் பதிலளித்தார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் 10ஆம் வகுப்பு தனிதேர்வர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments