கால்வானில் இருந்து சில சீன துருப்புக்கள் - வாகனங்கள் பின்வாங்கின
கால்வான் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து சில சீன துருப்புக்களும், போர் வாகனங்களும் பின் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில், இந்திய கட்டமைப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த சீன ராணுவம், இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் கட்ட முயன்றதாக சொல்லப்பட்டது.
அது தொடர்பாக இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 15 ஆம் தேதி கால்வானில் ஏற்பட்ட மோதலில், சீன ராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது.
அதில் ராணுவ கர்னல் உட்பட 20 இந்திய வீர ர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 22 ஆம் தேதி, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 2 ஆவது தடவையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, கால்வான் எல்லை மற்றும் உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து தங்களது சீன துருப்புக்கள் பின்வாங்குவர் என சீன தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், சீன துருப்புக்களும், அவர்களின் போர் வாகனங்களும் கால்வான் எல்லையில் இருந்து பின்வாங்கி உள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.
Comments