ஆன்லைன் வகுப்புகளால் கண் பாதிப்பு ஏற்படுமா என அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரியும், கண்பாதிப்பு ஏற்படும் என்பதால், 5ஆம் வகுப்பு வரை முற்றாகத் தடையும், 6ஆம் வகுப்புக்கு மேல் 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறியும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துக்களைப் பெற்று தெரிவிக்க 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டபடி, எழும்பூர் கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments