அலகாபாத் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ... இந்திரா காந்தி எமர்ஜென்ஸி அறிவித்த பின்னணி என்ன?

0 7985

கடந்த 1975- ம் ஆண்டு ஜூன் 25- ந் தேதி இந்தியாவில் எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் கறுப்புகறை படிந்த நாள். இந்த எமர்ஜென்ஸி கிட்டத்தட்ட 21 மாதங்களுக்கு பிறகு, 1977- ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் சாமானியர்கள், அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் என அனைவரின் உரிமையும் பறி போனது. இந்திரா காந்தி எமர்ஜென்ஸியைக் கொண்டு வர பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமானது அலகாபாத் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு...

கடந்த 1971- ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 518 மக்களவை தொகுதிகளில் 352 தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. இந்திரா காந்தி பிரதமரானார். இந்திரா காந்தி வாக்காளர்களுக்கும் லஞ்சம் கொடுத்தும் மது பாட்டில்கள் கொடுத்தும் வாக்குகளைப் பெற்றார்; விமானப்படை விமானங்களைத் தன் பிரசாரத்துக்காக இந்திரா காந்தி பயன்படுத்தினார் என்று ஐக்கிய சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரபேரலி தொகுதி வேட்பாளர் ராஜ்நாராயணன் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா விசாரித்து வந்தார். 1975- ம் ஆண்டு ஜூன் 12 - ம்தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், ''இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தலை ரத்து செய்கிறேன். இந்திராகாந்திக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கிறேன்'' என்று நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா தீர்ப்பளித்தார்.

இந்தியாவே இந்தத் தீர்ப்பால் அதிர்ந்து போனது. குறிப்பாக இரும்புப் பெண்மணியான இந்திராகாந்தி ஆடியே போனார். ஆனால், பிரதமர் பதவியை விட்டு விலகி விட இந்திரா காந்தி விரும்பவில்லை. சப்தர்ஜங் ரோட்டில் உள்ள பிரதமர் வீட்டில் இந்திரா காந்தி அனைத்து தலைவர்களையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். சஞ்சய் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தாய்க்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஜூன் 24- ந் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணா ஐய்யரிடத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், கிருஷ்ணா ஐய்யரின் தீர்ப்பும் இந்திராவுக்கு சாதகமாக அமையவில்லை...

''அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது. இந்திரா காந்தி பிரதமர் பதவியில் தொடர இந்த நீதிமன்றம் அனுமதியளிக்கிறது. ஆனால் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்திரா காந்தி ஒரு எம்.பியாக தன் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது'' என்று கிருஷ்ணா ஐய்யர் தீர்ப்பளித்தார். நாடு முழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இதைக் காரணம் காட்டி , நாட்டில் அமைதியின்மை நிலவுவதாகவும் வன்முறை வெடிப்பதாகவும் கூறி அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவிடத்தில் எமர்ஜென்ஸி அறிவிப்பில் கையொப்பம் பெற்றார் இந்திரா காந்தி.

ஜெயபிரகாஷ் நாராயண், அடல்பிகாரி வாஜ்பாய், எல். கே. அத்வானி , மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரேடியோவில் பேசிய இந்திரா காந்தி, அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதால் எமர்ஜென்ஸி தேவையானதாக இருக்கிறது என்றார். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் முடக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் மட்டும் 1 லட்சம் மக்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர். பிரதமர் அலுவலகத்துக்கு பதிலாக, தன் வீட்டிலிருந்தே அரசை நடத்தினார் இந்திரா காந்தி. பிறகு, 1977- ம் ஆண்டு மார்ச் 21 - ந் தேதி எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் மூன்று வகையில் அவசரநிலையை பிரகடனம் செய்யலாம். முதலாவது தேசிய அவசரநிலை, இரண்டாவது ஜனாதிபதி ஆட்சி, மூன்றாவது பொருளாதார அவசரநிலை. மூன்று அவசரநிலைகளையும் ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் அமல்படுத்த முடியாது. எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு முறையும் நீட்டிக்க நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் ஒப்புதல் பெற வேண்டும். 1975- ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸிக்கு நான்கு முறை நீட்டிப்பு அளிக்கப்பட்டது. எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது... 

எமர்ஜென்ஸி காலக்கட்டம் இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்குமே அவப்பெயரை ஏற்படுத்தியது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments