பில்லூர் குடிநீர் திட்டம் முதலமைச்சர் அடிக்கல்
கோவையில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பில்லூர் மூன்றாம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு துறை சார் முடிவுற்ற திட்டப்பணிகளையும் துவங்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முதலமைச்சர் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மூன்றாம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் 39 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரியகுளத்தில் புனரமைக்கப்பட்ட குளக்கரையின் ஒரு பகுதியையும், வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்தல் பணி மூலம் 23 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஒருபகுதியையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதத்தில் 2வது இடத்தில் இருக்கிறது என்றார்.
Comments