பெற்ற மகளை வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்..! 6 வருடம் கழித்து அம்பலம்

0 21208

திருப்பூரில், தனது தவறான தொடர்பால் பெற்ற தாயே காதலனுடன் சேர்ந்து மகளை வீட்டிற்குள் கொன்று புதைத்த விவகாரம் 6 ஆண்டுகளுக்குப் பின் அம்பலமாகி உள்ளது..  வீட்டிற்குள் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தாய் சகாயராணியோ கணவர் அப்துல்காசரைப் பிரிந்து பாக்கியராஜ் என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

தாய்வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் எஸ்தர்பேபி மாயமானதாக , தாய் சகாயராணி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறையினர் மாயமான வழக்கு என 6 வருடங்களாக கிடப்பில் போட்டு விட்டனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சேவியர் அருண் என்பவர் திருப்பூரில் தனது வீட்டிற்கு வந்து சென்ற பின்னர் தான், தன் மகள் காணாமல் போனதாகவும், அதனால் அவர் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்தர் பேபியின் தந்தை புகார் அளித்தார்.

இதனையடுத்து சேவியர் அருணை பள்ளிக்கரணை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது மாயமான எஸ்தர் பேபியை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் பேபியை, தனது குடும்பத்தை கவனித்துவந்த பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு தாய் சகாயராணி வற்புறுத்தியுள்ளார். அதற்கு உடன்பட மறுத்து எஸ்தர்பேபி சண்டையிட்டு வந்ததால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அக்கம் பக்கத்தில் மகள் எஸ்தர்பேபி விமர்சித்ததால், மகள் என்றும் பாராமல் அவரை தீர்த்துக் கட்ட சகாயராணி சதி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டிற்கு வந்த தனது சகோதரர் சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்து குடியிருந்த வீட்டிற்குள்ளேயே புதைத்ததை சகாயராணி ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான்கு நாட்கள் கழித்து, தனது மகளை காணவில்லை என போலீசில் சகாயராணி புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து எஸ்தர் பேபி கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து வீரபாண்டி பகுதியில் எஸ்தர்பேபி சடலம் புதைக்கப்பட்ட அந்த வீட்டில் காவல்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது.

சடலம் புதைக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆனதால் எலும்புக் கூடுகளாக இருந்தது. அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவ குழுவினர் எடுத்துச் சென்றனர். தவறான தொடர்பால் பெற்ற தாயே அடைக்கலம் தேடி வந்த மகளை இரக்கமின்றி கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த சம்பவம் ஆறு வருடங்களுக்குப் பிறகு அம்பலமாகி உள்ளது.

தவறான உடல் சார்ந்த தேடல் எப்போதும் அதில் தொடர்புடையவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என்பதற்கு பெற்ற மகளை கொன்ற புகாரில் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சகாயராணி மற்றும் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments