செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தாக்குதலா..? இருவர் மரணத்தின் பகீர் பின்னணி
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் சிறையில் பலியான சம்பவத்தில், கடனுக்கு செல்போன் கேட்டு கொடுக்காத முன் விரோதத்தில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன்கடை நடத்தி வந்த செல்வராஜும், இவரது மகன் பென்னிக்சும் கோவில்பட்டி கிளை சிறையில் பலியான நிலையில், அவர்களை தாக்கிய சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி போராட்டம் வலுத்தது.
தந்தை மகனை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் , ஏட்டு முருகன், முத்துராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒட்டு மொத்தமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 12 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கடையை அடைக்க மறுத்து தந்தையும் மகனும் தரையில் அமர்ந்து ஆபாசமாக பேசி உருண்டு புரண்டதால் அவர்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டுவிட்டதாக ஏட்டு முருகன் தெரிவித்ததாக எஸ்.ஐ.ரகு கணேஷ் வழக்கு பதிந்துள்ளார்.
இருவரது மரணத்திற்கு காரணமான இரு உதவி ஆய்வாளர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி பலியானவர்களின் குடும்பத்தினர் பிணக்கூறாய்வுக்கு ஒப்புக் கொள்ள மறுத்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் இருவரின் பிணக்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் , பென்னிக்ஸ் கடைக்கு சென்று 2 செல்போன்கள் கடனுக்கு கேட்டதாகவும், அதற்கு பென்னிக்ஸின் தந்தை செல்வராஜ் செல்போன் கொடுக்க மறுத்ததால், அந்த முன்விரோதம் காரணமாகவே இருவரையும் வலுக்காட்டாயமாக காவல் நிலையத்தில் வைத்து பாலகிருஷ்ணன் கொலைவெறி கொண்டு தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக முத்துராமலிங்கம் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
அதே போல மற்றொரு உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கடந்த வாரம் ஒரு இளைஞரை தாக்கி உயிரிழக்க செய்ததாகவும், அந்த குடும்பத்தினரை மிரட்டி புகார் அளிக்கவிடாமல் செய்து விட்டதாக போராட்டத்தினர் குற்றஞ்சாட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவரை மிரட்டி அவரை பாலியல் அடிமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக புதிய புகார் ஒன்று எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைப்பது போன்ற வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்த விவரங்களும் வெளியாகி உள்ளன.
இந்த இரட்டை மர்ம மரண வழக்கை விசாரிக்கும் குழுவினர் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மைத் தன்மை குறித்தும் விரிவான விசாரணையை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும், கடந்த காலங்களில் இவர்கள் மீது உள்ள புகார்களை விசாரித்தாலே, இந்த சம்பவத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வரும் எனவும் கூறுகின்றனர் சாத்தான்குளம் வழக்கறிஞர்கள்.
இருவரது மரணத்திற்கும் நீதி கேட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தால் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நேற்று இரவு பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல்களை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவரையும் தாக்கி மரணமடைய செய்ததாக, சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். தந்தையும், சகோதரனையும் தாக்கி கொலை செய்ததாக, சம்மந்தப்பட்ட போலீசார் மீது, தமிழக அரசு கொலை வழக்குப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் உடல்களை பெற்றுக் கொள்வதாக, ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் மூன்றாவது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Comments