வாட்டிய வறுமை; மூன்று சகோதரிகள்! - கொரோனாவுக்கு பலியான 22 வயது மருத்துவ ஊழியரால் தவிக்கும் குடும்பம்...
கொரோனா ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்குத் தாங்க முடியாத துயரத்தை அளித்துவருகிறது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இந்த ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி வருகின்றனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மரணம் இப்போது கோவை மக்களைத் தாங்க முடியாத துயரத்தில் தள்ளியிருக்கிறது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உதவியாளராக கணேசன் (வயது 22) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளை அழைத்து வரும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். திருப்பூர், மங்கலம் பகுதியில் தங்கியிருந்தார். திண்டுக்கல்லுக்குச் சென்று வந்த நிலையில், கடந்த ஜூன் 18- ந் ததி இவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த இளைஞர் இன்று (ஜுன் 24) பரிதாபமாக இறந்து போனார். இந்த இளைஞருக்குத் தந்தை இல்லை. தாயாரும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு இவரின் வருமானம் மட்டுமே உதவியாக இருந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாகவே கொரோனா காலத்திலும் தன் பணியை விடாமல் அவர் மேற்கொண்டு வந்துள்ளார். இளைஞரின் திடீர் மரணத்தால் அந்தக் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.
கொரோனாவால் உயிரிழப்பவர்களை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோரு மாவட்டத்துக்குக் கொண்டு செல்ல அனுமதியில்லை. இதனால், கோவை ஆத்துப்பாலம் மயானத்திலேயே இளைஞரின் உடல் எரியூட்டப்பட்டது. குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் ஆத்துப்பாலம் மயானத்துக்கு வந்திருந்தனர். ஆனால், இளைஞரின் உடல் அருகே குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இளைஞரின் முகத்தை மட்டும் தொலைவிலிருந்தே குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் இளைஞரின் தாயாரும், சகோதரிகளும் கதறி அழுதது மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. தன் ஒரே மகனை கொரோனாவுக்கு பறி கொடுத்த அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவரின் உறவினர்களும் தவித்தனர்.
”கொரோனாவால் பலியான இளைஞரின் குடும்பத்துக்குத் தமிழக அரசு உதவ வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments