சென்னையைக் காக்கும் 'பிதாமகன்'; முற்றிலும் கொரோனாவுக்காக ஒதுக்கப்படுகிறது ராஜீவ் காந்தி மருத்துவமனை!

0 5843

சென்னையின் முக்கிய அடையாளம் சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்ல அதனெதிரில் பிரமாண்மாக நிற்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையும்தான். சென்னை எப்படி பிரமாண்ட  நகரமோ... அதே போல ராஜீவ் காந்தி அரசு மருந்துவமனையும் பிரமாண்டமானது. கடந்த 1664- ம் ஆண்டு நவம்பர் 16- ந் தேதி திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை பிளேக், பெரியம்மை முதல் கொரோனா வரை பார்த்துள்ளது. எத்தனை இடர்பாடுகளை சந்தித்தாலும், தன் நோயாளிகளை இந்த மருத்துவமனை கைவிட்டதே இல்லை. போரில் காயமுறும் கிழக்கிந்திய கம்பெனி வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துவமனையாகவே உருவாக்கப்பட்டது. முதலில் புனித. ஜார்ஜ் கோட்டைக்குள் இயங்கி வந்த இந்த மருத்துவமனை பிறகு தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனை உருவாகி கிட்டத்தட்ட 357 ஆண்டுகள் ஆகிறது.

கடந்த 1835- ம் ஆண்டு பிப்ரவரி 2- ந் தேதி மருத்துவக் கல்லூரியாக இது மாற்றப்பட்டது. ஆசியாவிலேயே முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையான கொல்கத்தாவை விட இந்த மருத்துவக் கல்லூரி நான்கு நாள்கள் இளையது. 1878- ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே பெண்கள் டாக்டருக்கு படிக்க தடையிருந்த காலத்தில் உலகின் முதல் பெண் மருத்துவரும் மகளிர் மருத்துவ நிபுணருமான மேரி ஸ்க்ராலிப்பை உருவாக்கிய பெருமை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு உண்டு. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தற்போதைய துணை வேந்தர் சுதா ஷேஷய்யனும் இங்கு படித்தவர்தான்.

அரசு பொது மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு 2011- ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றம் செய்தார். காலப்போக்கில் ஸ்டான்லி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என சென்னையில் பல பிரமாண்ட அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டாலும் , கால காலமாக சென்னை மக்களைக் காக்கும் மருத்துவமனைகளில் முதன்மையானது ராஜீவ்காந்தி மருத்துவமனை . பல நோய்களிலிருந்து சென்னை மக்களைப் பாதுகாக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை தற்போது முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.

சென்னையில் அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், நகரின் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் 3,500 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முற்றிலும் குறைந்து விட்டனர். 250-க்கும் குறைவான புற நோயாளிகளே தற்போது இங்கு உள்ளனர். இதனால், மருத்துவமனையை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டுவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பை கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்து. இங்கு 5,000 படுக்கைகள் தயார் செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் 10 - ம் தேதிக்குள் இந்த சிறப்பு மையம் முற்றிலும் செயல்படத் தொடங்கும். இந்த மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். கொரோனா நோயாளிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சையளிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள். காய்ச்சல் மட்டுமுள்ளவர்கள் கொரோனா ஹெல்த் சென்டர்களில் அனுமதிக்கப்படுவார்கள். அறிகுறிகள் குறைவாக அல்லது இல்லாதவர்கள் கொரோனா கேர் சென்டர்களிலும் மற்றவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments