எச்-1பி விசா விவகாரம்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை
எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அந்த விசாக்களை நம்பித்தான், தங்களின் வாடிக்கையாளர்களின் முக்கிய திட்டச் செயல்பாடுகளை முடித்துக் கொடுக்க தங்களது பணியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புகின்றன என்றும், அமெரிக்க அதிபரின் முடிவு இந்தியாவிற்கு சுமார் 40 பில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பை உருவாக்கியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த விசாக்கள் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த போதே, மத்திய அரசு, இந்தியாவின் நலன் கருதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும், அமெரிக்க அதிபருடன் தாம் போற்றிவரும் நட்பை பிரதமர் பயன்படுத்தி இருக்க வேண்டும் என கூறியுள்ள ஸ்டாலின், அவற்றைச் செய்யத் தவறியதால், இந்தியப் பணியாளர்கள் நடக்கக் கூடாதென நினைத்தது இப்போது நடந்து விட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments