சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு - நடவடிக்கை கோரி சாலை மறியல்

0 12799
காவல் நிலையத்தில் போலீஸ் தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் ஊரடங்கு விதியை மீறி கடையை திறந்தது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில்  தாக்கப்பட்டதன் விளைவாக இருவரும் உயிரிழந்ததாக கூறி குடும்பத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கு விதியை மீறி இரவு 8 மணிக்கு மேல் கடையை திறந்திருந்தது தொடர்பாக ஜெயராஜூக்கும் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்நிலையத்துக்கு ஜெயராஜ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ்க்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஊரடங்கு விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் இருவரையும் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு, மாரடைப்பு ஏற்பட்டதால் சிறையின் பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகன் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காய்ச்சல் எனக் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை ஜெயராஜும் இன்று காலை உயிரிழந்தார். காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் தந்தை, மகன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போலீசார் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி சாத்தான் குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு நடத்தி வருகின்றனர். மேலும், குடும்பத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடிப்பதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை:

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாக்கப் மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை, மகனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பறிக்கப்பட்ட  உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய 2 உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் மட்டும் அல்லாமல் காவலர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சாத்தன்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் டிஜிபி அலுவலகத்தில் எம்பி வசந்தகுமார், எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் குடும்பத்தினருடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் உள்பட அனைத்து போலீசாரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில், அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறையில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிதியுதவி வழங்க அரசுக்கு பரிந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய 2 உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் மட்டும் அல்லாமல் காவலர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி டிஜிபி திரிபாதியிடம் திமுக எம்பி கனிமொழி மனு அளித்தார். சாத்தான் குளம் காவல் நிலைய போலீசாரை இடமாற்றம் செய்தது மட்டுமின்றி, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில்  பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கபடுமென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம், தமிழக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை ஏடிஜிபி-க்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் 8 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமைகள் ஆணைய விசாரணைப் பிரிவு டிஜிபிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments