லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனப்படைகள் பின்வாங்க இந்தியா வலியுறுத்தல்

0 8605

இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் 12 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பான்காங் சோ பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகள் பின்வாங்க வேண்டும் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இருநாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தணிப்பதற்கு இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

நேற்று லடாக்கின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்குட்பட்ட பகுதியில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியூ லின் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை காலை 11.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர உள்ளநிலையில் பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

ஆயினும், லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பான்காங் சோ-வில் இருந்து சீனப்படைகள் பின்வாங்க வேண்டும் என்றும், எல்லைப்பகுதியில் ஏப்ரல் மாதத்திற்கு முந்தையை நிலையை கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியா உறுதிபட வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது அண்மையில் ஏற்பட்ட மோதலில் தனது இரண்டு ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதனிடையே ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நார்வானே இன்று லே பகுதிக்கு நேரில் சென்று எல்லை நிலவரத்தையும், ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளையும் மேற்பார்வையிட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments