முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி திருச்சி வருகை
டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி திருச்சி செல்கிறார்.
காவிரி நீர் கடைமடை பகுதி வரை தங்குதடையின்றி விரைவாக சென்றடையும் வகையில் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 312 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், அது குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
அதில் பங்கேற்கும் முதலமைச்சர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், பூச்சிக் கொல்லி, உரம் போன்ற வேளாண் இடு பொருட்கள் போதியளவில் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிகிறார். தொடர்ந்து முக்கொம்பு பகுதியில் நடைபெற்று வரும் கதவணை கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுவார் என கூறப்படுகிறது.
Comments