தாழ்ப்பாள் இல்லாக் கதவு.. தற்கொலையைத் தடுக்க ஏற்பாடு..!

0 5817

சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் நோயாளிகள் சிலர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அறைக் கதவுகளில் உள் பக்கம் தாழ்ப்பாள் அகற்றப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகச் சிகிச்சை முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த முகாம்களில் தங்கியிருந்த நோயாளிகள் சிலர் நோய்த் தொற்று குறித்த அச்சம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டனர். வண்டலூர் அருகே கொரோனா சிகிச்சை மையத்தின் தனியறையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். இதனால் கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களில் கதவுகளை உள்பக்கம் தாழிட முடியாத அளவிற்கு தாழ்ப்பாள் அடைக்கப்பட்டுள்ளது. அறையில் உள்ள மின் விசிறிக்கும், மின் விளக்கிற்கும் ஒரே ஸ்விட்ச் தான். மின் விசிறியை நிறுத்தினால் மின்விளக்கும் அணைந்துவிடும் வகையில் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை சூளையில் புதிதாகக் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் சுமார் 800 வீடுகளை கொரோனா தனிமை மையங்களாக மாற்றியுள்ளனர்.
பெண்கள் தனி பிளாக்கிலும், ஆண்கள் தனி பிளாக்கிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிளாக்கிற்கும் தனித்தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நோயாளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

கதவுகளில் தாழ்ப்பாள் அகற்றப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, தனித்தனி அறைகளில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ அவசர உதவி தேவை என்றால் கதவு தாழிட்டிருக்கும் போது உடனடியாக உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் உள்பக்கம் கதவைத் தாழிட முடியாதபடி அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.

மன உளைச்சலில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க மருத்துவர்கள் இருப்பதாகவும், நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments