சீன ராணுவம் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம்

0 7345
இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம்

எல்லையில் சீன ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறினால் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ராணுவ விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடந்த 15ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்த நிலையில், சீனத் தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இருநாட்டு எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், லடாக் நிலவரம் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் லடாக்கில் தற்போது நிலவும் சூழல், முப்படைகளின் தயார் நிலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சீனாவுடனான எல்லைப் பகுதியில் அந்நாட்டின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு ராணுவம் மற்றும் விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடற்பகுதிகளையும் கண்காணிக்க கடற்படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் எத்தகைய அத்துமீறலையும் எதிர்கொள்வதற்கு கடுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு ராணுவத்திற்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சண்டையை நாமாகத் தொடங்க வேண்டாம் என்றும், எந்த சந்தர்ப்பத்திலும் ஊடுருவல் நடந்தால் பின்வாங்க வேண்டாம் என்று முப்படைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் சீன ராணுவம் அத்துமீறினால் அதனை எதிர்கொள்ள ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக ராணுவ விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்திய - சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை இனி பயன்படுத்தலாம் என விதிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996 மற்றும் 2005 ல் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி, கட்டுப்பாட்டு எல்லையில், இரு தரப்புக்கும் இடையே நேருக்கு நேர் ஏற்படும் மோதல்களின் போது துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என இருநாடுகளும் ஏற்றுக் கொண்டன. ஆனால் கால்வன் பள்ளத்தாக்கு தாக்குதலில், சீன துருப்புக்கள், ஆணி அறையப்பட்ட கம்பிகள், கற்கள் மற்றும் கட்டைகளால் காட்டிமிராண்டித் தனமாக தாக்கியதை தொடர்ந்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments