கடைமடை வந்த காவிரி நீர்

0 4244

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் கடைமடை பகுதிக்கு சென்றடைந்தது. விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அங்கு திறக்கப்பட்ட தண்ணீர் 16-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு சென்றது.

கல்லணையில் இருந்து நீரின் வரத்துக்கு ஏற்ப கிளை ஆறுகள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அந்த வகையில், கல்லணையில் இருந்து கீழ்வேளுர் பகுதியில் உள்ள வெண்ணாற்றுக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 305 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

வெண்ணாற்றில் இருந்து ஏழு கிளை ஆறுகளுக்கு பிரித்து விடப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான இறையான்குடி கிராமத்தின் பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது.

கதவனைக்கு ஆர்ப்பரித்து வந்த காவிரி நீரை பொதுமக்களும் விவசாயிகளும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் கும்மி அடித்து, கிராமிய பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாண்டவையாற்றின் தடுப்பணையில் இருந்து சிறு சிறு வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதேபோன்று, வெண்ணாற்றில் இருந்து திறக்கப்பட்ட 1200 கன அடி தண்ணீர் கடை மடை பகுதியான மயிலாடுதுறை எல்லை திருவாலங்காடு வந்தடைந்தது. திருவாலங்காடு விக்ரமன் தலைப்பிற்கு வந்த நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தி மலர் தூவி வரவேற்றனர்.

நீர் தேக்கத்தில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 712 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 815 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு நாட்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

மேலும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்ட கடைமடை பகுதியான கீழணை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இந்த தண்ணீரானது அப்படியே முழுவதும் வடவாறு வாய்க்கால் வழியாக வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படுகிறது. காவிரி நீர் மூலம் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments