தெய்வங்கள் கூட தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே..! உலக தந்தையர் தினம்
உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தாயின் அன்பைப் போல் அதிகம் பேசப்படாதது தந்தையின் பாசம்...
தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் அன்பு எல்லோருக்கும் தெரியும்படி தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் பாயும் நீரோடை போன்றது..
தாய் கருவில் பத்துமாதம் தான் சுமக்கிறாள். தந்தையோ தன் பிள்ளைகளை வாழ்நாளெல்லாம் நெஞ்சிலும் கண்ணிலும் வைத்து சுமக்கிறார்.
பிள்ளைகளை நோயில் இருந்து,ஆபத்தில் இருந்து, காக்கவும் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து சொந்த காலில் நிற்க வைக்கவும், ஆளாக்கவும், பிள்ளையின் முன்னேற்றத்தில் கண்கள் கசிய நிற்கும் தந்தையை போல் வேறு யார் உண்டு...
குடும்பத்தைப் பேணி காப்பதில் தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்தது அல்ல தந்தையின் தியாகம். எந்த ஒரு குடும்பமும் தந்தையால்தான் ஆலமரமாக வேரூன்றி வளர்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்று ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குடும்பத்தின் சுமைகளை சுமப்பதோடு மட்டுமின்றி குழந்தைகளை வழிநடத்தும் நண்பன், ஆசானாகவும் விளங்குபவர் தந்தை.
பெற்று வளர்த்த பெற்றோரையே தூக்கியெறியும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலத்தில் தாய் -தந்தையின் பெருமையை எந்நாளும் போற்றிப் பணிவோம்...
வேர்களில்லாமல் மலர்கள் இல்லை.
Comments