பனைமர உச்சியில் போராடிய உயிரின் கடைசி நிமிடங்கள்..! தேவை ஒரு ஸ்கைலிப்ட்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பதனீர் எடுக்க பனைமரத்தில் ஏறிய தொழிலாளி உடல் நலக்குறைவால் மரத்தின் உச்சியில் உயிருக்குப் போராட, ஒரு மணி நேர முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு துறையில் தென் மாவட்டங்களுக்கும் ஸ்கைலிப்ட் வண்டியின் தேவையை உணர்த்திய சோக சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த விஜய நாராயணபுரத்தை சேர்ந்த 63 வயதுடைய நடேசன் என்பவர் தான் பனை மர உச்சியில் உயிருக்குப் போராடிய பனை தொழிலாளி..!
சீர்காட்சி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து பனை தொழில் செய்து வந்த நடேசன் சனிக்கிழமை காலையில் பதனீர் இறக்குவதற்காக அங்குள்ள பனை மரம் ஒன்றில் ஏறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கணவரை தேடிச்சென்ற அவரது மனைவி ஒரு பனைமரத்தின் உச்சியில் பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் நடேசன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சக பனை தொழிலாளி ஒருவர் மேலே ஏறி அவரை மீட்க முயன்ற நிலையில் அவரால் முடியவில்லை, உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பனை மரத்தில் ஏறும் அளவுக்கு பயிற்சி இல்லாததாலும், ஸ்கைலிப்ட் என்ற அடுக்கு ஏணி வசதி கொண்ட மீட்பு வாகனங்கள் இல்லாததாலும் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
தனி தனி ஏணிகளை எடுத்து வந்து ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்து கயிற்றால் கட்டிய தீயணைப்பு வீரர்கள், அதனை நிமிர்த்தி வைத்து பனை மரத்துடன் சேர்த்து பலமான கயிறால் சுற்றி கட்டினர்.
பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவர் மரத்தின் உச்சிக்கு ஏணிவழியாக ஏறினார். இதையடுத்து 1 மணி நேரத்துக்கு மேலாக உயிருக்கு போராடிய நடேசனை மூர்ச்சையான நிலையில் உடலில் கயிற்றை கட்டி மெல்ல கீழே இறக்கினர்.
நடேசன் மீட்டு கொண்டு வரப்பட்டதும் அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. அதில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் நினைவு திரும்பாமலே பனை ஏறும் தொழிலாளி நடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஸ்கைலிப்ட் என்று அழைக்கப்படும் உயரமான ஏணிகளை கொண்ட மீட்பு வாகனங்கள் சென்னை கோவை திருச்சி ஆகிய நகரங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், தென்மாவட்டங்களின் அவசரகால பயன்பாட்டுக்காக மதுரையில் ஒரு வண்டி இருந்திருந்தால் பனை தொழிலாளியை விரைவாக மீட்டு காப்பாற்றி இருக்கலாம் என்று விபரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தற்போது அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருவதால் தென் மாவட்ட மக்களின் நலன் கருதி குறைந்தபட்சம் ஒரு ஸ்கைலிப்ட் மீட்பு வாகனமாவது இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பு.
Comments