இந்திய வீரர்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கையால் ஊடுருவல் முறியடிப்பு: பிரதமர் அலுவலகம் விளக்கம்
இந்திய வீரர்களது துணிச்சல் மிக்க நடவடிக்கை காரணமாகவே, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு, ஊடுருவல் இல்லாமல் இருப்பதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் விவகாரத்தில் பிரதமர் மோடி கூறிய விவரங்களை திரிக்க முயற்சிப்பது விஷமத்தனமான செயல் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள நிலவரம் தொடர்பாக, நேற்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்பதோடு, இந்திய எல்லைக்குள் தற்போது ஊடுருவல் ஏதும் இல்லை என்றும், இந்திய ராணுவ நிலை எதுவும் எதிரியால் கைப்பற்றப்படவில்லை என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
அப்படியானால், இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட கால்வன் பள்ளத்தாக்கு, இந்திய பகுதி இல்லையா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. மோதல் நடைபெற்றது சீனப் பகுதி என்றால், இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர், அவர்கள் எங்கு வைத்துக் கொல்லப்பட்டனர் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
இத்தகைய விமர்சனங்கள், பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்கு விஷமத்தனமான விளக்கம் கொடுக்கும் முயற்சி என, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துகள், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் நமது பக்கத்தில் சீன வீரர்கள் யாரும் இல்லை என்று பிரதமர் கூறியது, நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் சீன தரப்பினர் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி மற்றும் கட்டுமானங்களை எழுப்பும் முயற்சி, நமது வீரர்களது தியாகத்தின் மூலம் ஜூன் 15ஆம் தேதி முறியடிக்கப்பட்டது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு, அதிக வலிமையுடன் சீனப் படையினர் வந்தனர் என்றும், இந்தியாவும் அதற்கு நிகரான பதிலடியைக் கொடுத்தது என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் குறுக்கே சீன தரப்பு கட்டுமானங்களை எழுப்ப முயன்றதோடு, அத்தகைய செயல்களை நிறுத்த மறுத்ததன் விளைவாகவே, ஜூன் 15ஆம் தேதி கால்வனில் வன்முறை ஏற்பட்டதாக, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்திய பகுதி எது என்பது, இந்திய வரைபடத்தில் தெளிவாக உள்ளது என்றும், எல்லையை பாதுகாக்க அரசு தீர்க்கமாக, உறுதிபூண்டுள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத ஆக்கிரமிப்பை பொறுத்தவரை, கடந்த 60 ஆண்டுகளில் 43 ஆயிரம் சதுரகிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பு, எப்படிப்பட்ட சூழலில் விட்டுக்கொடுக்கப்பட்டது என்பதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. அதேசமயம், ஒருதலைப்பட்சமாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மாற்றியமைக்கும் எந்த முயற்சியையும் அரசு அனுமதிக்காது எனவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நேரங்களில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது, எல்லைகளை காத்து நிற்கும் நமது வீரர்களின் ஊக்கத்தை குலைக்கும் முயற்சி என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கும் படைகளுக்கும் உறுதியான ஆதரவை தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் உணர்வு மேலோங்கியிருந்தது என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments