ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!
ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, இதுவரை முடிவு செய்யவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்பீட் பிரேக் போடுவது போல, நோய் பரவலை தடுக்கவே முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் புதிதாக தொடங்கப்பட உள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 54 சதவீதமாக உள்ளது என்றார். கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா தொற்று என்பது புதிரான, புதிய நோய் என்றும், அது எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னையில், 527 முகாம்கள் மூலம், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லாமல், இங்கேயே இருந்தால்தான் பரிசோதனை செய்ய முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..! #CMEdappadiPalaniswami | #Chennai | #ChennaiLockDown https://t.co/aC39lU7Tlu
— Polimer News (@polimernews) June 20, 2020
Comments