நம்பிக்கைத்தானே வாழ்க்கை... நிரூபிக்கும் மிஸோரம் விவசாயிகள்!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரத்தில், தங்கள் விளைநிலங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகளை சாலையோர கடைகளில் விவசாயிகள் விற்பனைக்கு வைத்துள்ளனர். ஆனால், இந்த கடைகளில் ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது. கடைகளில் விவசாயிகள் இருந்து தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்வதில்லை. மாறாக, விலையை காகிதத்தில் எழுதி கடையின் முன் தொங்க வைத்து விடுகின்றனர். விருப்பமுள்ள மக்கள் பழங்களை எடுத்துக் கொண்டு, அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் உரிய பணத்தை போட்டு விட்டு செல்கிறார்கள்.
மிஸோரம் தலைநகர் அயிஸ்வால் அருகே நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஏராளமான கடைகளைப் பார்க்கமுடிகிறது என்று தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'மை ஹோம் இன்டியா ' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கடைகளின் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த அமைப்பு பூர்வகுடிமக்களான 'Nghah Lou Dawr' என்பவர்களின் கலாசாரம் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த மக்கள் காடுகளில் தாங்கள் சேகரிக்கும் பழங்கள், மலர்கள், காய்கறிகளை இப்படி கடைகள் ஏற்படுத்தி விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கடைகள் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றன. துர்நம்பிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சமூகவலைத் தளங்களில் வைரலாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். 'இந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் ' ' இந்த மக்களை நான் நேசிக்கிறேன்' எனவும்' நம்பிக்கைத்தானே வாழ்க்கை' என்றும் ஏராளமானோர் மிஸோரம் விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Comments