வீடு வீடாக சென்று புள்ள புடிக்கும் புரபசர்ஸ்..! பொறியியல் பாவங்கள்

0 42179

தமிழகத்தில் இன்னும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகள் இப்போதே கல்லூரிப் பேராசிரியர்களை வீடு வீடாக அனுப்பி, தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது...

சினிமா ஒன்றில் ஏலக்கடைகாரரை ஏமாற்றுவதற்காக தெருவில் சுற்றும் மனம் நலம் பாதிக்கப்பட்டோரை தேடிப்பிடிப்பது போன்ற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்று இருக்கும், அதே போன்று தங்கள் கல்லூரியில் வேலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிலர், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னரே வீடு வீடாக சென்று மாணவர்களை பிடிக்கும் வேலையை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் உள்ள அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் தான் வீடு வீடாக சென்று இன்னும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களை, முன் கூட்டியே தங்கள் கல்லூரியில் சேருவதற்காக முன்பதிவு செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

கல்லூரி முதல்வர் குருலிங்கம் உத்தரவின் பேரில் இவ்வாறு பரப்புரை செல்ல வீடு வீடாக செல்லும் பேராசிரியர்கள், முதலில் புகைப்படம் மூலம் அவர்கள் பயணம் மேற்கொள்ளும் Location-ஐ கல்லூரி வாட்ஸ் அப் குழுவில் உறுதி செய்ய வேண்டுமாம்.

மாணவர்களை சந்தித்து கல்லூரியின் அருமை பெருமைகளைப் எடுத்துக் கூறிய பின்னர், உண்மையில் அந்த மாணவர்களை சென்று சந்தித்தார்கள் என்பதற்கு ஆதாரமாக குறிப்பிட்ட பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவருடன் புகைப்படமும் எடுத்து கல்லூரியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாகவும்.

வீடு வீடாக சென்று இன்னும் தேர்வு முடிவுகள் தெரியாமல் தவித்திருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்க செல்லும் பேராசிரியர்களை கண்காணிப்பதற்கு என்று அந்த வாட்ஸ்அப் குழுவில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா முழுமையாக சரியாகும் வரை அரசின் அறிவுரையை ஏற்று தனித்திரு விழித்திரு என்று முன் எச்சரிக்கையுடன் வீட்டில் இருக்கும் மாணவர்களை சந்தித்து, கல்லூரியின் தற்காலிக கொள்கை பரப்பு செயலாளர்கள் போல பேராசிரியர்களை செயல்பட வைத்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.

பாடம் நடத்துவதற்காக தான் கல்லூரி பணிக்கு வந்திருக்கிறோம் என்றும், ஆனால் மிகவும் மரியாதை குறைவாக தங்களை கல்லூரிக்கு படிப்பதற்கு ஆள்பிடிக்கும் வேலைக்கு அனுப்புவது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் இதனால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கொரோனா நோய்த் தொற்று வரலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மூன்று மாதமாக சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வேறு வழியில்லாமல் இந்த ஆள் பிடிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் தங்கள் கல்லூரியின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூற பேராசிரியர்களாகவே விரும்பி சென்று மாணவர்களை சந்திப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments