நெருப்பு வளைய சூரிய கிரகணம்... விண்ணில் ஓர் அதிசயம்..!

0 13551

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணில் தோன்றும் அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம், நாளை தமிழகத்தின் சில நகரங்களிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என பொது மக்களுக்கு, வானியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சந்திரனின் நிழல், சூரியனின் வட்டத்திற்குள் விழுந்து , சூரியனின் விளிம்பு பகுதி நெருப்பு வளையம் போல் விண்ணில் தெரியும் அபூர்வ காட்சியை, கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் என அழைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்குப்பின் இந்த முறை, இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி முதல் மதியம் 2.30 மணி வரை, ஐந்தே கால் மணி நேரம், விண்ணில் இந்த அதிசய நிகழ்வை காண முடியும்.

வட இந்தியாவில் முழுமையாகவும், தென் இந்தியாவில் பகுதி அளவிலும் தோன்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம், தமிழகத்தின் சில நகரங்களிலும் தெரியும். இதன்படி, சென்னையில் 34 சதவீதம் அளவுக்கு தெரியும் என கூறிய வானியல் ஆய்வாளர்கள், இதனை எவ்வாறு காண வேண்டும்? என விளக்கி கூறினர்.

இதுதவிர, ஒரு அட்டை அல்லது காகிதத்தில் ஓட்டை போட்டு, அதன் வழியாகவும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண முடியும் . இந்த ஓட்டை, வட்டம், சதுரம், செவ்வகம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

பின்னர் அந்த அட்டையை வெயிலில் தலைக்கு மேல் தூக்கி நிழல் விழும்படி பிடித்தால் கிரகணம் தெரியும். குறிப்பாக, மத்திய ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா மற்றும் தெற்கு சீன ஆகிய நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படும் என கூறிய வானியல் நிபுணர்கள், எக்காரணம் கொண்டும், வெறும் கண்ணால் இதனை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

சென்னை - பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை காண வழக்கமாக ஏற்பாடு செய்யப்படும். ஆனால் தற்போது, கொரோனாவின் வீரியம் உச்சம் எட்டி உள்ளதால், பொதுமக்களை, வீட்டில் இருந்தே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காணுமாறு, வானியல் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முழு கங்கண சூரிய கிரகணம் வட இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக 98.6 விழுக்காடு காணமுடியும். இதே ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி, விண்ணில் நிகழும் மற்றொரு சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும். ஆனால், நெருப்பு வளைய சூரிய கிரகணம் இனி 2031 ஆம் ஆண்டு மே 21 - ல் தான்தெரியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments