நாட்டைக் காக்கும் பிரதமரின் முடிவு.. துணை நிற்போம் என உறுதி..!

0 7339

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக முழு ஆதரவளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். பிரதமரின் முடிவுகளுக்கு திமுகவும் துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், அதிமுக சார்பில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது, நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகம் மற்றும் அதிமுக உறுதியாக நிற்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நிலைமையைக் கையாள்வதில், பிரதமர் மிகுந்த புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றார். பிரதமர், இந்திய அரசு, நமது பாதுகாப்புப் படைகள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். 

பிரதமரின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எல்லையில் இறுதிவரை போராடி- தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள - அனைத்து இந்திய இராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதாகத் கூறினார்.

நாட்டைப் பாதுகாக்கத் திமுகவும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள் என்று கூறியவர், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments