ராஜீவ் அவதாரத்தில் ராகுல் காந்தி... அரசியலில் பலனளிக்குமா?
இந்தியாவின் சிறந்த அரசியல் கட்சித் தலைவராக வருவார் என்று கருதப்பட்ட நிலையில், ராகுல்காந்தி அரசியலில் தகிடுதத்தம் போடும் நிலையில்தான் உள்ளார்.கடந்த 2014- ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு , தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு தோல்விதான் கிடைத்து வருகிறது. எப்போதுமில்லாத அளவுக்கு ராகுல் காந்தி காலக்கட்டத்தில்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாரதிய ஜனதா கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவில் அதிகபட்சமாக 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது . காங்கிரஸ் கட்சி வெறும் 6 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், பாரதிய ஜனதா கட்சி மிக வலுவான கட்சியாக மாறியது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில்தான். தற்போது , மக்களவையில் 303 எம்.பிக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளனர். மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பிக்கள்தான் உள்ளனர்.ராஜ்யசபாவிலும் பாரதிய ஜனதா கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியதால், கட்சித் தலைவர் பதவியையும் ராகுல் காந்தி துறந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். கட்சித் தலைவர் பதவியை துறந்தாலும், ராகுல் காந்தி ஆக்டிவான அரசியல்வாதியாகவே வலம் வருகிறார். இதற்கிடையே, தன் தோற்றத்தையும் தந்தை ராஜீவ்காந்தி ஸ்டைலுக்கு மாற்றியுள்ளார். ராஜீவ் காந்தி போலவே ஹேர்ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார். இதனால், ராகுலை பார்க்கும் போது,அவரின் தந்தை ராஜீவ் காந்தியை பார்ப்பது போலவே இருக்கிறது. ராகுல் காந்தியின் புதிய கெட்டப் அரசியலில் எந்தளவுக்கு பலனளிக்குமென்று தெரியவில்லை.
இதற்கிடையே , கால்வனில் இந்திய வீரர்கள் சீன வீரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, ராகுல் காந்தி தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, 'இந்திய அரசியல் வரலாற்றிலேயே இவ்வளவு முதிர்ச்சியற்ற அரசியல் தலைவரை பார்த்ததில்லை 'என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
Comments