இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மீதும் சைபர் தாக்குதல்... சீனா அடாவடி!
ஆஸ்திரேலியா மீது மிகப்பெரிய அளவில், நவீன முறையிலான சைபர் தாக்குதல் நடைபெற்றிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குச் சீனா காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்படும் இந்தத் தாக்குதல் குறித்து உலக நாடுகளையும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
கான்பெர்ராவில், அவசர கதியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்திருக்கும் ஸ்காட் மாரிசன், "அடையாளம் தெரியாதவர்களால், அதி நவீன முறையில் மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஆஸ்திரேலியா மற்றும் மாநில அரசின் இணைய தளங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசியல் காட்சிகள், கல்வி, ஆரோக்கியம், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கோவிட் 19 விவகாரத்தில் சீனா - ஆஸ்திரேலியா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், 'கோவிட் 19 விவகாரத்தில் சீனா மீதான சர்வதேச விசாரணை அவசியம்' என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு இறக்கு மதி செய்யும் மாட்டு இறைச்சி மற்றும் பார்லிக்குச் சீன அரசு கட்டுப்பாடு விதித்தது. மாட்டிறைச்சிக்குத் தடை விதித்த சீன அரசு பார்லிக்கு அதிக வரியையும் விதித்தது. இத்தோடு இல்லாமல் ஆஸ்திரேலியாவில் தங்கிப் படிக்கும் தெற்காசிய மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய அளவில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவையும் கடுமையாகப் பாதித்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பனிப்போர் நிலவிக்கொண்டிருந்த சூழலில் இப்போது நடத்தப்படும் சைபர் தாக்குதல் இரு நாட்டு உறவையும் மேலும் சிக்கலாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு முன்பு இந்தியாவிலும் சீன ராணுவத்தின் இணையதள போர்ப் பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் செங்டுவிலிருந்து சைபர் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் குறித்த பேட்டியின் போது சீன நாட்டின் பெயரைக் குறிப்பிடாத ஸ்காட் மோரிசன், " சைபர் தாக்குதல் அதிநவீன முறையில் தொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநில அளவிலும் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் சைபர்தாக்குதல் கணிசமான அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார்.
சைபர் தாக்குதலில் கணிசமான அளவிலான சேதமும் ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Prime Minister Scott Morrison said Australia has been a target of 'state-based' cyber attacks targeting all levels of government, political organizations, essential service providers and operators of other critical infrastructure https://t.co/TDHGdYmigx pic.twitter.com/LRPV51hiXG
— Reuters (@Reuters) June 19, 2020
Comments