அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியில் வந்தாலும் பறிமுதல் நடவடிக்கை... சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை..!

0 8305

காய்கறி, மளிகை, உணவு பொருட்கள் வாங்க, வாகனங்களில் வெளியில் வந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அண்ணா சாலை-திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் போலீசாரின் வாகன தணிக்கையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். வாகன தணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பு பணி குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட, ட்ரோன் கேமராக்களை இயக்கி, கண்காணிப்பு பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

50 வயதுக்கும் மேற்பட்டோர், ஏற்கனவே நோய் பாதிப்பு இருப்பவர்கள் என 10 சதவீத காவலர்களுக்கு தொடர்ந்து விடுப்பு நீட்டிக்கப்படுவதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை அண்ணாசாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையின்றி பயணம் செய்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. விதிவிலக்கின்றி, அனைத்து வாகனங்களும் தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

முந்தைய முழுஊரடங்கு கட்டங்களில் வடசென்னை பகுதியில், கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், வடசென்னை பிரதான சாலைகளில் உள்ள சந்தைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு, குறு சந்தைகளிலும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் வருவோரின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதேபோல, வியாசர்பாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரதான சாலைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு அனுமதித்துள்ள அத்தியாவசிய, அவசர தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். முறையான அனுமதி இன்றி வெளியே வாகனங்களில் வர அனுமதிக்கப்படுவதில்லை. காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவோருக்கு சூழ்நிலையை எடுத்துரைத்து அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வடசென்னை வியாசர்பாடி சுந்தர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ராயபுரம் பகுதியில் உள்ள பிரதான சாலையான திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் அதில் இணையும் இணைப்பு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உரிய அனுமதி இன்றி சாலையில் வலம் வந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அங்காடித் தெருக்கள் நிறைந்த தியாகராய நகர் பகுதி, முழுஊரடங்கால் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. கடைகள், தேநீர் விற்பனையகங்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை தணிக்கைக்குப் பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.

வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் அதிகாலை முதலே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மருத்துவம் மற்றும் குடிநீர், பால் உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன் சந்தை விற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள் என ஒருவர் கூட காசிமேடு கடற்கரைக்கு வராததால் கடந்த 80 நாட்களில் இன்றுதான் காசிமேடு கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் கெரோனா தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் 12 நாள்  முழுஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளில், 12 நாள் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், முழுஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

முறையான அனுமதி இல்லாமல் செல்பவர்களை தடுக்க, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 52 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து திருவள்ளூருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்குள்ளும் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக அரசால் முன்னர் வழங்கப்பட்டிருந்த இ-பாஸ் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் கார்களில் வருவோரும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். முறையான அனுமதியின்றி வரும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீண்டும் வந்த வழியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன.

அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு, இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சென்று திரும்பும் உள்ளூர்வாசிகள் மட்டும் அடையாள அட்டை சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். சரக்கு வாகனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வாகன சோதனை குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பூந்தமல்லி, போரூர், குன்றத்தூர், மாங்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில், இ-பாஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போலீசாபால் பறிமுதல் செய்யப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளில் முழுஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 12 நாள் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 54 ஊராட்சிகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாமல் வர கூடிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். சென்னையில் இருந்து பலர் தொடர்ந்து வெளியேறிய காரணத்தினால் கடந்த இரு நாட்களாக செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி கடுமையான போக்குவரத்து நெரிசலுடன் இருந்த நிலையில் தற்போது வாகன போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது.

சென்னை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக் கணக்கான கடைகள் நிறைந்துள்ள பிராட்வே பகுதி, முழுஊரடங்கால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் இல்லாத வாகனங்கள், அவசர-அவசிய காரணங்கள் இல்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாங்காடு மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம்,
மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய 18 ஊராட்சிப் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து அநாவசியமாக வெளியேறுவதைத் தடுக்க, பிரதான சாலைகளை இணைக்கும் அனைத்து இணைப்பு சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள, வியாசர்பாடி குடியிருப்பு பகுதிகளை தட்டிகள் கொண்டு அடைத்துள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதியினை தாண்டி மக்கள் வெளியே செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றவர்கள் அவசர தேவைக்காக மட்டும், வெளியே செல்லவும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படுகின்றனர். வியாசர்பாடி எஸ்.எம் நகர், மார்கெட் நகர் பகுதி சாலை, பிரதான சாலையில் இணைவதை தடை செய்துள்ளதால் மக்களை ஒரு வட்டத்திற்குள் எளிதில் கண்காணிக்கும் உத்தியை போலீசார் கையாளுகின்றனர்.

பல இடங்களில் வாகன தணிக்கைக்கு வசதியாக பாதைகளை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. அந்தவகையில், வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதி வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் எம்.ஆர் நகர் வழியாக திசை திருப்பப்பட்டு தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மார்க்கமாக மகாகவி பாரதி நகர் தொட்டு வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி உள்ள பகுதி வழியாக நகருக்குள் அனுமதிக்கின்றனர்.

உரிய அனுமதி உள்ளோர் மற்றும் அவசர தேவை இருப்போரும் நகருக்குள் செல்ல இந்த வழியாக அனுப்பப்படுகின்றனர். இதனால் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் சூழல் உள்ளது. மேலும் பலருக்கு சரியான பாதை தெரியாததால் சுற்றி வந்த பகுதியினையே சுற்றி சுற்றி வரும் நிலையும் உள்ளது.

வடசென்னையில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலமாகவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். கொரானா பாதிப்பு அதிகம் உள்ள இராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளையும் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments