சென்னையில் முழு ஊரடங்கால் முக்கிய சாலைகள் அனைத்தும் அடைப்பு...
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நள்ளிரவு முதல் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் ஆள்நடமாட்டம், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து மாநகர சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இன்று அதிகாலை 12.01 முதல், வரும் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழுஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசிய விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டும், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. சரக்கு போக்குவரத்து மற்றும் அவசர-அவசிய காரணங்கள் தவிர்த்து, வாகனபோக்குவரத்திற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களை தவிர்த்து, மக்கள் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும், வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்றே வாங்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப, சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் உரிய காரணங்கள் மற்றும் ஆவணங்கள் இன்றி அனுமதிக்கப்படுவதில்லை. முக்கிய சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும், தடுப்புகள் விலக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, கடைகள், பேரங்காடிகள், ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இறைச்சி, மீன் கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
முந்தைய கட்டங்களை விட ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாலும், போலீசாரின் கெடுபிடி காரணமாகவும், மாநகர சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
Comments