உச்சத்தை தொட்ட கொரோனா.. மேலும் 13,586 பேர் பாதிப்பு..!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 13,586 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெறும் நிலையில், நோய் தொற்றிலிருந்து 2 லட்சத்து 4 ஆயிரத்து 711 பேர் குணமாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 751ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், டெல்லியில் 49 ஆயிரத்தையும், குஜராத்தில் 25 ஆயிரத்தையும், உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 13 ஆயிரத்தையும், மேற்கு வங்கத்தில் 12 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
Comments