'உணர்ச்சிவசப்படும் போது பகுத்தறிவை இழந்து விடுகிறீர்கள்!' விவோ உடனான ஒப்பந்தம் குறித்து ஐ.பி.எல் கருத்து
லடாக்கில் கால்வான் எல்லை பகுதியில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் , இந்திய மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். சீன பொருள்களை வாங்குவதில்லை என்றும் பல நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராமதாஸ் அதவாலே, 'ஃபைரட் ரைஸ் உள்ளிட்ட சீன உணவு வகைகளேயே சாப்பிடாதீர்கள் ' என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனப் பொருள்களுக்கு எதிராக இந்தியாவில் இப்படி எதிர்ப்புணர்வு கிளம்பிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடரான, ஐ.பி.எல் தொடருக்கு சீனாவின் மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான 'விவோ' தான் ஸ்பான்ஷராக இருக்கிறது.
இந்த நிலையில், விவோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப்படாது என்று ஐ.பி.எல் அமைப்பின் பொருளாளர் அருண் துமானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , "நீங்கள் உணர்ச்சிவசப்படும் போது, பகுத்தறிவை இழந்து விடுகிறீர்கள். சீன நிறுவனத்தை ஆதரிப்பதற்கும் இந்தியாவின் காரணத்துக்காக சீன நிறுவனத்திடம் உதவி பெறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும்போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடமிருந்து பணத்தை பெறுகின்றனர். அதில் ஒரு பகுதியை பிசிசிஐ (பிராண்ட் விளம்பரமாக) செலுத்துகிறார்கள், அதில், கிரிக்கெட் வாரியம் 42 சதவீத வரியை மத்திய அரசுக்கு செலுத்துகிறது.
இது இந்தியாவுக்கு நல்லதே தவிர, சீன ஆதரவு நிலைப்பாடு இல்லை . ஐ.பி.எல் தொடருக்கு அவர்கள் ஸ்பான்ஷர் செய்யவில்லையென்றால் முழுத் தொகையையும் சீன நாட்டுக்கு எடுத்து செல்வார்கள். ஆனால், அந்த பணம் நம் நாட்டுக்கு கிடைக்கும் போது அதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அரசுக்கும் உதவி செய்கிறோம்.
இந்தியாவில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டால்தான் தவறு. இந்த ஒப்ந்தங்கள் அந்த நிறுவனம் வளர்ச்சியடைய உதவும். குஜராத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டேடியத்தை கட்டும் ஒப்பந்தம் இந்திய நிறுவனமான எல் அண்டு டி- க்குதான் வழங்கப்பட்டது. இதுபோன்ற ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கவில்லை. '' என்று தெரிவித்துள்ளார்
ஐ.பி.எல் மட்டும் அல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கே ஓப்போ எனப்படும் மற்றோரு சீன செல்போன் நிறுவனம்தான் ஸ்பான்ஷராக உள்ளது. செப்டம்பர் மாதத்தில்தான் இந்திய அணிக்கும் ஓப்போ நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டிலிருந்து, பெங்கருவைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமான பைஜோ இந்திய அணிக்கு ஸ்பான்ஷர் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Comments