மிரட்டும் கொரோனா பயம்.. கரம் கொடுக்கும் தன்னார்வலர்கள்..
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைப் பார்க்கவோ, அருகில் செல்லவோ மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில், இறந்தவரின் உடலை சுமந்து உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் சிலர் மனமுவந்து ஈடுபட்டுள்ளனர்.
கவிஞர் கண்ணதாசனின் இந்த வரிகள், ஒருவரது மரணத்திற்கு பிந்தைய எதார்த்தத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கை தத்துவம்.
ஆனால், மக்களின் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ், மரணத்திற்கு பின்னான இந்த தத்துவத்தையும் மாற்றிவிட்டது.
இறந்தவர் உடலை அருகில் நின்று பார்த்து அழவும் முடிவதில்லை, உடலை வீட்டிற்கும் கொண்டு வருவதில்லை, வீதியிலும் இறுதி ஊர்வலமும் இல்லை. ரத்த உறவுகளும் தூரத்தில் நின்று பார்த்து, துயரத்தை துடைத்துக் கொண்டு கடக்கும் மோசமான நிலையை கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ளது.
இன்னும் சில குடும்பத்தினரோ உடலை தூரத்தில் நின்று பார்த்து மரியாதை செய்யகூட முன் வருவதில்லை.
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை தூக்கி வீசியதும், மற்றொரு மருத்துவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது.
கொரோனா குறித்த கண்மூடித்தனமான அச்சம் அந்த அளவிற்கு மக்களிடம் ஊடுருவியுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்முறையில் அடக்கம் செய்யும் பணியை தன்னார்வலர்கள் சிலர் அச்சமின்றி மேற்கொண்டுள்ளனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 120 இளைஞர்கள் இவற்றை சேவையாக கருதி செய்து வருகின்றனர். பகுதிவாரியாக குழுவிற்கு 10 பேர் வரை பிரிந்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை பெற்று, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி அடக்கம் செய்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையிலும், தனிமை மையங்களிலும் இருக்கும் சூழலில், அந்த குடும்பத்தில் உயிரிழந்தவரின் உடலை பெற்று சென்று உரிய மரியாதை செய்து நல்லடக்கம் செய்கின்றனர்.
சென்னையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 32 பேரின் உடல்களை சுகாதார துறையினரிடம் இருந்து பெற்று நல்லடக்கம் செய்துள்ளதாக கூறும் அவர்கள், சொந்த செலவில் பிபிஇ கவச உடைகள் வாங்கி உடுத்திக் கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
உரிய பாதுகாப்பு, விழிப்புணர்வோடு இயங்குவதால் நோய்த்தொற்று குறித்த அச்சம் தங்களுக்கு இல்லை எனக் கூறும் இந்த தன்னார்வலர்கள், தங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை அரசு தரப்பில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிரட்டும் கொரோனா பயம்.. கரம் கொடுக்கும் தன்னார்வலர்கள் | #Volunteers | #COVID19 https://t.co/hIY8Bibqc3
— Polimer News (@polimernews) June 19, 2020
Comments