சீனாவுடன் பேச்சுவார்த்தை.. விடுவிக்கப்பட்ட இந்திய வீரர்கள்?

0 13072

சீனா உடனான மோதலில் இந்திய வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை என ராணுவம் தரப்பில் கூறப்பட்ட நிலையில், நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு சீன பாதுகாப்பில் இருந்து நான்கு ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் கற்கள், கம்பிகள் மற்றும் மூங்கில் கம்புகளை கொண்டு தாக்கி கொண்டனர்.

இதில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டிய நிலையில், எல்லை தாண்டி வந்து சீனப் படையினர் கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றதே மோதலுக்கு காரணம் எனவும், திட்டமிட்டு சீனா தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் எல்லைப்பகுதியில் அமைதியை நிலை நாட்டும் நோக்கில் இருதரப்பிலும் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, மோதலின்போது சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், எவ்வித ஆயுதமுமின்றி இந்திய ராணுவ வீரர்களை அனுப்பியது யார், அவர்கள் ஏன் ஆயுதம் இல்லாமல் அனுப்பப்பட்டனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்துப் படையினரும் எப்போதும் ஆயுதம் வைத்திருப்பார்கள் எனவும், ஜூன் 15 ஆம் தேதி கால்வானிலும் படை வீரர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், கைகலப்பு போன்ற மோதலின்போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது, இருநாடுகளுக்கு இடையேயான நீண்டகால ஒப்பந்தங்களின்படி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கும் ராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவர்த்தையில் உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், நேற்று மாலை 5 மணி அளவில் லெப்டினண்ட் கர்னல் மற்றும் 3 மேஜர் அதிகாரிகள் உட்பட, 10 இந்திய ராணுவ வீரர்கள் சீன பாதுகாப்பில் இருந்து எந்தவித காயங்களும் இன்றி விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments