ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா.. அமோக ஆதரவு அளித்த சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி நன்றி..!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 2 ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவு அளித்த சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மாமன்றத்தில் மிகவும் அதிகாரம் பெற்ற அவையான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அமைப்பாகும்.
ஐ.நா. மாமன்றத்தில், உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றும் ஒரே அவை இதுதான். இந்த அவையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்புநாடுகள், வீட்டோ பவர் எனப்படும் ரத்து அதிகாரத்துடன் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக் கொண்டேயிருக்கும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், பதவிக் காலம் முடியும் 5 உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறும்.
இந்தியா இதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் ஈராண்டு தற்காலிக உறுப்பினராக பதவி வகித்துள்ளது. கடைசியாக, 2011-2012 காலகட்டத்தில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இருந்தது. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும், ஐ.நா. பொது அவையின் 75ஆவது அமர்வு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது.
தற்காலிக உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 193 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். இந்த தேர்தலில் பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகளை பெற்று அமோக வெற்றிபெற்றது. 2021ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி, 2022ஆம் ஆண்டு வரை, ஆசிய-பசிபிக் மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தியா தற்காலிக உறுப்பினராக இருக்கும்.
இந்த தேர்தலில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்தலில் வாக்களித்தனர்.
இதனிடையே, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக இடம்பெற சர்வதேச சமூகம் காட்டிய அமோக ஆதரவுக்கு மிக்க நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து, சர்வதேச அமைதி, பாதுகாப்பு, மீட்சி, நீதியை நிலைநாட்ட பாடுபடும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
Comments